மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கர 18 பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (09) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவன் தெவிநுவர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது குறித்த சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுவனுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் ஏற்கனவே நிலவிய முரண்பாடு தீவிரமடைந்ததன் விளைவாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கந்தர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





