துருக்கியில் இரும்பு மற்றும் உருக்குத் தொழிற்சாலையில் வெடிப்பு; 16 பேர் உயிரிழப்பு!

மேற்கு துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் அமைந்துள்ள இரும்பு மற்றும் உருக்குத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (09) நண்பகல் வேளையில், இஸ்மிர் மாகாணத்தின் அலியாகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹபாஸ் (Habaş) இரும்பு மற்றும் உருக்குத் தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உருக்கப்பட்ட இரும்பை வார்க்கும் பணியின்போது, தொழிற்சாலையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த பாரம் தூக்கும் கிரேன் (Ceiling Crane) உடைந்து மின்சார வில் உலைக்குள் (Arc Furnace) விழுந்துள்ளது. இதனால் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்பைத் தொடர்ந்து தொழிற்சாலையின் மேற்பகுதியில் பெருமளவிலான சாம்பல் நிறப் புகையும் தூசியும் எழுந்ததாக அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளன.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்த 14 பேர் பிராந்தியத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெடிப்பைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் 10 பேரை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore