Ozempic, Wegovy உள்ளிட்ட நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்பு மருந்துகளுக்கு புதிய கண் பாதிப்பு எச்சரிக்கை – அமெரிக்க FDA நடவடிக்கை!

நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் Ozempic, Wegovy, Mounjaro மற்றும் Zepbound உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடிய அரிதான கண் பாதிப்பு தொடர்பில் புதிய எச்சரிக்கைகளைச் சேர்க்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மருந்துகளைப் பயன்படுத்துவதால், பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய Non-Arteritic Anterior Ischemic Optic Neuropathy (NAION) எனப்படும் கண் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என FDA தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, GLP-1 வகை மருந்துகளின் உத்தியோகபூர்வ மருந்து லேபிள்களில் உள்ள “எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்” (Warnings and Precautions) பகுதியில் இந்த அபாயம் தொடர்பான தகவல்களைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NAION என்பது திடீரெனவும் வலியின்றியும் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய கண் நரம்பு பாதிப்பாகும். சில சந்தர்ப்பங்களில் இது நிரந்தரமான பார்வைக் குறைபாட்டிற்கும் வழிவகுக்கலாம்.

கண்ணின் பார்வை நரம்பின் முன்பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், இதற்கான அடிப்படைக் காரணம் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.

இது தொடர்பில் Eli Lilly நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில், FDA வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவிப்பு அனைத்து GLP-1 வகை மருந்துகளுக்கும் பொருந்துவதாகவும், தமது நிறுவனத்தின் மருந்துகள் தொடர்பில் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, Novo Nordisk நிறுவனத்தின் பேச்சாளர், தங்களிடம் உள்ள தரவுகள் இந்த மருந்துகளுக்கும் குறித்த கண் பாதிப்பிற்கும் இடையில் நேரடியான காரணத் தொடர்பை உறுதிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐரோப்பிய மருந்துகள் முகவரகத்தின் (EMA) பாதுகாப்புக் குழு கடந்த ஆண்டு வெளியிட்ட மதிப்பீட்டின்படி, Semaglutide எனப்படும் செயற்பாட்டு மூலப்பொருளைக் கொண்ட Ozempic மற்றும் Wegovy மருந்துகளை குறைந்தது ஒரு வருடம் பயன்படுத்தும் 10,000 பேரில் ஒருவருக்கு NAION பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2025ஆம் ஆண்டு வெளியான ஆய்வொன்றில், Semaglutide மருந்துகளைப் பயன்படுத்திய நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஏனைய வகை நீரிழிவு மருந்துகளைப் பயன்படுத்திய நோயாளிகள் ஒப்பிடப்பட்டுள்ளனர். இதில், இரண்டு வருட சிகிச்சைக்குப் பின்னர் GLP-1 மருந்துகளைப் பயன்படுத்தியவர்களிடம் NAION பாதிப்பு ஏற்படும் அபாயம் இருமடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்த மருந்துகளின் உடல் எடை குறைப்பு, இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மற்றும் இதய, சிறுநீரக ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கருத்தில் கொண்டு, அவற்றின் நன்மை மற்றும் அபாயங்களைச் சமநிலைப்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கியமாக, இந்த மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி சிகிச்சையைத் திடீரென நிறுத்தக்கூடாது. திடீர் பார்வை மாற்றங்கள் அல்லது பார்வை இழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore