முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். குறித்த பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோவைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.





