பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ராபியா அஹ்சான் வீட்டில் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்ததாக ஒப்புதல்!

பாகிஸ்தானின் பிரபல செய்தி வாசிப்பாளரான 41 வயதுடைய ராபியா அஹ்சான், ராவல்பிண்டியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் அஹ்சான் தாஹிர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், ராபியா தனது படுக்கையறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடம்பெற்றபோது அவரது தாயாரும் சகோதரியும் வீட்டின் புல்வெளிப் பகுதியில் இருந்துள்ளனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அவரது சகோதரி அல்வினா படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது, ராபியா இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததையும், அவரது கணவர் கைத்துப்பாக்கியுடன் அங்கிருந்ததையும் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்டப் பரிசோதனையில், ராபியாவின் கழுத்துக்குக் கீழ் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயமும், முதுகின் வலது பக்கத்தில் மற்றுமொரு காயமும் காணப்பட்டுள்ளன.

பஞ்சாப் தடயவியல் அறிவியல் அதிகாரசபையினர் (PFSA), சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் .30 ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளை மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், வீட்டில் பணியாற்றிய ஆண் ஊழியர் ஒருவர் பொலிஸாரிடம் வழங்கிய தகவலின்படி, துப்பாக்கிச் சூடு தவறுதலாக இடம்பெற்றதாக அஹ்சான் தாஹிர் கூறியுள்ளார். எனினும், விசாரணையின்போது குறித்த கைத்துப்பாக்கிக்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரத்தை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் தனது மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தானின் ‘Samaa’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் முதல் பெண்மணி ஆசீபா பூட்டோ சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ராபியா அஹ்சானின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அவர், சம்பவம் தொடர்பில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர் ஹினா ஜாவேத் என்ற மற்றுமொரு பணிபுரியும் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். அந்த வழக்கின் விசாரணை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பெண்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இன்றி வாழவும் பணியாற்றவும் கூடிய பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான ராபியா அஹ்சான், 92 News தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது கணவர் அஹ்சான் தாஹிர், வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர் அறக்கட்டளையில் (OPF) பிரதி பணிப்பாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore