கண்டி, உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் உள்ள மலை உச்சியிலுள்ள கல் குகையில் 15 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில், குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (15) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபரின் 36 வயதுடைய உறவினர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகிலுள்ள மீமுரே, கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உடுதும்பறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின்போது, அப்பகுதியிலுள்ள கடையொன்றில் இருந்து வழக்கத்தைவிட அதிகளவு அரிசியைத் தினமும் வாங்கிச் சென்ற இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரைப் பின்தொடர்ந்த பொலிஸார், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் காட்டுப் பகுதியில் பொலித்தீன்களால் மூடப்பட்டிருந்த கல் குகையொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு காணாமல் போயிருந்த சிறுமி இரண்டு மாத பெண் குழந்தையுடன் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி குறித்த குகையிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையின் தொப்புள் கொடி, கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தினால் வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும், கித்துள் பாகு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் குழந்தை நீராட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 36 வயதுடைய உறவினரும் நேற்று (14) உடுதும்பறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், மீட்கப்பட்ட சிறுமியும் இரண்டு மாத பெண் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.





