செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவில் இவ்வாரம் நடைபெறவுள்ள தேசிய பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்கள் அணியும் அனைத்து கண்ணாடிகளும் பரிசோதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் கடினமான பரீட்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் கணக்காளர் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஹான் சங்-சூக் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பரீட்சை மண்டபங்களுக்குள் மாணவர்கள் ஸ்மார்ட் சாதனங்களைக் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு பரீட்சை அமர்விலும் மாணவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடிகள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்மார்ட் கண்ணாடிகள் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டுசெல்லத் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு குற்றவியல் தண்டனைகளும் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வியாழக்கிழமை நடைபெறவுள்ள தென் கொரியாவின் தேசிய பல்கலைக்கழகத் தகுதிப் பரீட்சையில் (CSAT) சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் எட்டு மணிநேரம் நடைபெறும் இந்தப் பரீட்சை, மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கும் முக்கியமான பரீட்சையாகக் கருதப்படுகிறது.
இந்தப் பரீட்சையின் போது ஆங்கிலக் கேட்பறிதல் பகுதி நடைபெறும் அரைமணி நேரத்தில், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தடைசெய்யப்படும் அளவுக்கு அந்நாடு முக்கியத்துவம் அளிக்கிறது.
AI தொழில்நுட்பம் மூலம் மோசடி
அண்மையில் தென் கொரியாவின் கணக்காளர் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர், சிறிய கமரா, கையடக்கத் தொலைபேசி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இணையத்தில் வெளியிட்ட காணொளியில், பரீட்சையில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரிய அவர், இந்த மோசடி தொடர்பாக சியோல் பொலிஸாரிடமும் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் மோசடி செய்யத் திட்டமிடுபவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், விசாரணையாளர்களிடம் அனைத்து தகவல்களையும் தெரிவிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் சவால்
செயற்கை நுண்ணறிவு வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளில் கமராக்கள், ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள் மற்றும் பல்வேறு உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பரீட்சைக் கேள்விகளைப் படம்பிடித்து, சில விநாடிகளுக்குள் பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், பரீட்சை மோசடிகளுக்கான புதிய அச்சுறுத்தலாக இத்தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது.
தென் கொரியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழித் திறனை மதிப்பிடும் பரீட்சையில் பங்கேற்ற இரு மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்திய நிலையில் பிடிபட்டுள்ளனர்.
தைவானில் மருத்துவப் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் பங்கேற்ற மாணவர் ஒருவரும் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது. பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தக் கண்ணாடியின் சட்டகம் வெப்பத்தை வெளியிடுவது தெரியவந்துள்ளது.
அதேபோன்று, சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் பங்கேற்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு அதிகாரிகள் அனைத்து கண்ணாடிகளையும் பரிசோதிக்கும் நடவடிக்கையை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வித்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வரும் அதேவேளை, பரீட்சைகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதிலும் புதிய சவால்களை ஏற்படுத்தி வருவதாக இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.





