தொடர்ச்சியான செரிமானக் கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுபவர்களிடம் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான எளிய ‘ஸ்பொஞ் பரிசோதனையை’ (Sponge Test) அதிகளவில் அறிமுகப்படுத்த இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான புதிய வரைவு வழிகாட்டுதல்களை இங்கிலாந்தின் தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புத் தர நிறுவனம் (NICE) வெளியிட்டுள்ளது.
தற்போது சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்தப் பரிசோதனையை, இங்கிலாந்து முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் எண்டோஸ்கோபி பரிசோதனையுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த ஊடுருவல் கொண்டதும், சில நிமிடங்களில் குடும்ப மருத்துவர்களின் நிலையங்களிலேயே மேற்கொள்ளக்கூடியதுமாகும்.
எவ்வாறு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது?
இந்தப் பரிசோதனையின்போது, நூலுடன் இணைக்கப்பட்ட சிறிய கரையக்கூடிய காப்ஸ்யூல் ஒன்றை நோயாளி விழுங்க வேண்டும். அது வயிற்றுக்குள் சென்றதும் கரைந்து, அதனுள் இருக்கும் சிறிய ஸ்பொஞ் வெளியேறும்.
பின்னர், மருத்துவர் நூலை மெதுவாக வெளியே இழுக்கும்போது, அந்த ஸ்பொஞ் உணவுக்குழாயின் உட்புறச் சுவரில் உள்ள செல்களைச் சேகரித்துக்கொண்டு வெளியே வரும். சேகரிக்கப்பட்ட செல்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என ஆராயப்படும்.
NICE நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் பெங்கர் தெரிவிக்கையில், இந்தப் பரிசோதனை விரைவாகவும் குறைந்த ஊடுருவலுடனும் மேற்கொள்ளக்கூடிய முறையாக இருப்பதால், மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுபவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காண உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
NHS இங்கிலாந்தின் புற்றுநோய்த் துறைக்கான தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் பீட்டர் ஜோன்சன் தெரிவிக்கையில், ஏற்கனவே முன்னோடித் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் இந்தப் பரிசோதனையால் பயனடைந்துள்ளதாகவும், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரெட்ஸ் உணவுக்குழாய் தொடர்பான ஆபத்து
தொடர்ச்சியான நெஞ்செரிச்சல் மற்றும் அமிலப் பின்னோட்டம் (Acid Reflux) சிலருக்கு ‘பாரெட்ஸ் உணவுக்குழாய்’ (Barrett’s Oesophagus) என்ற நிலையை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில் உணவுக்குழாயின் உட்புறச் செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு 100 பெரியவர்களில் ஒருவரிலிருந்து இருவர் வரை இந்த நிலை காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நிலை உள்ள அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆனால், நீண்டகாலத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
NHS இல் எண்டோஸ்கோபி பரிசோதனைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சில நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில் ஸ்பொஞ் பரிசோதனை மாற்று வழியாக உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசோதனையில் வரையறைகளும் உள்ளன
எந்தவொரு நோயறிதல் பரிசோதனையும், எண்டோஸ்கோபி உட்பட, புற்றுநோயின் அனைத்து நிலைகளையும் கண்டறியும் உத்தரவாதத்தை வழங்காது என NICE சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, ஸ்பொஞ் பரிசோதனையில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இல்லை என முடிவு கிடைத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் நீண்டகால மருத்துவக் கண்காணிப்பில் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமிலப் பின்னோட்டம் காரணமாக வயிற்றிலிருந்து உணவுக்குழாயை நோக்கி அமிலம் மேலே வருவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இது மார்பின் நடுப்பகுதியில் எரிச்சல் உணர்வையும், வாயில் புளிப்புச் சுவையையும் ஏற்படுத்தக்கூடும்.
அதிக உடல் எடை, புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பாவனை ஆகியவை அமிலப் பின்னோட்டம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் பரிசோதனையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது தொடர்பான இறுதிப் பரிந்துரைகளை NICE அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.





