இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள மிடிகமை, குருபுவெல பகுதியில் இன்று (23) இடம்பெற்ற ரயில் விபத்தில் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுடன், STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயில் கடவையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது ஜீப்பில் நான்கு அதிகாரிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து மிடிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





