அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தங்களின் தூக்கத்தைப் பாதிப்பதாக அமெரிக்க இளைஞர்களில் பெரும்பாலானோர் கருதுவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வின்படி, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 62 சதவீதமானோர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களுக்குக் கிடைக்கும் தூக்கத்தின் அளவைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
2026 மே 26ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு
ஒட்டுமொத்த அமெரிக்க வயது வந்தவர்களில் 41 சதவீதமானோர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் தூக்கத்தை எதிர்மறையாகப் பாதிப்பதாகக் கூறியுள்ளனர். அதேவேளை, 5 சதவீதமானோர் ஸ்மார்ட்போன்கள் தூங்குவதற்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் பாதிப் பேரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்க வயது வந்தவர்களில் 53 சதவீதமானோர் தாங்கள் ஸ்மார்ட்போனில் அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடுவதாகக் கருதுகின்றனர். இந்த எண்ணிக்கை 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 64 சதவீதமானோரும், 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் 49 சதவீதமானோரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோரும் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்பவர்கள்
ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள போதிலும், கடந்த 12 மாதங்களில் தங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ததாக 45 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர். 46 சதவீதமானோர் அவ்வாறான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளனர்.
பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்தவர்களில் 25 சதவீதமானோர் தங்களின் முயற்சி மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 52 சதவீதமானோர் ஓரளவு வெற்றி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள்
அமெரிக்க வயது வந்தவர்களில் நான்கில் ஒருவர் கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 வயதுக்குக் குறைவானவர்களில் இந்த எண்ணிக்கை 42 சதவீதமாக உள்ளது. 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 33 சதவீதமானோர் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 34 சதவீதமான அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் வேலைத்திறனைப் பாதிப்பதாகவும், 22 சதவீதமானோர் அது தங்களின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்களின் நன்மைகளும் சுட்டிக்காட்டு
அதேவேளை, ஸ்மார்ட்போன்களின் பயன்களையும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 73 சதவீதமானோர் ஸ்மார்ட்போன்கள் மூலம் செய்திகளையும் தகவல்களையும் அறிந்துகொள்ள முடிவதாகக் கூறியுள்ளனர். மேலும், 51 சதவீதமானோர் ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு ஸ்மார்ட்போன்கள் உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள், தகவல் தொடர்புக்கும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியமான கருவிகளாக இருந்தாலும், அவற்றின் அளவுக்கு அதிகமான பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் கவலை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.





