நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்!

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனியர் மற்றும் அப்பதவியைப் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் (Aber Kawas) படைத்துள்ளார்.

நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க் நகரின் குயின்ஸ் (Queens) பகுதியில் அமைந்துள்ள 12ஆவது செனட் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிட்ட ஜனநாயக சோசலிசவாதியான அபெர் கவாஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கான் டோவை (Han Khon To) தோற்கடித்து 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நியூயோர்க் மாநில அரசியலில் பாலஸ்தீனிய மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்கான நிலைப்பாட்டுடன் அரசியல் பயணம்

பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அபெர் கவாஸ், தனது கொள்கைகளில் சமரசம் செய்யாமல் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியுமா என்ற தயக்கம் ஆரம்பத்தில் தனக்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு தொடர்பில் மக்களிடையே உருவாகியுள்ள புதிய அரசியல் அணுகுமுறைகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கான நம்பிக்கையைத் தனக்கு வழங்கியதாக அவர் அல் ஜசீரா ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க் நகரின் மேயராகத் தெரிவான ஸோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிசவாதிகள் அமைப்பான DSA ஆகியவற்றின் ஆதரவுடன் அவர் தேர்தலில் களமிறங்கினார்.

குறைந்த செலவிலான வீடமைப்பு, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவை அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.

அவரது பிரசாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்ததுடன், தொலைபேசி மூலமான பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

அகதி பின்னணியிலிருந்து அரசியல் சாதனை வரை

பாலஸ்தீனிய அகதிப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த அபெர் கவாஸ், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வளர்ந்தவர்.

அவரது குடும்பத்தின் வாழ்க்கைப் பயணம் பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. அவரது பெற்றோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களாவர். பின்னர் ஜோர்தானில் வளர்ந்த அவர்கள் திருமணம் செய்து கொண்டதுடன், 1990களில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.

அபெர் கவாஸ் ஏழாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவான ICE அவரது தந்தையைத் தடுத்து வைத்த சம்பவம் குடும்பத்தின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் குடும்பத்தின் பொருளாதார மற்றும் அன்றாடப் பொறுப்புகளை அவரது தாயார் தனியாகச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய அனுபவங்கள் குடியேற்றவாசிகள், தொழிலாளர் வர்க்கத்தினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் உரிமைகள் தொடர்பான அவரது அரசியல் சிந்தனையை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீன ஆதரவு சட்டமூலம் முக்கிய இலக்கு

செனட் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நியூயோர்க் மாநிலத்தைச் சேர்ந்த இலாப நோக்கற்ற நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதைத் தடுக்கும் வகையிலான ‘Not on Our Dime!’ சட்டமூலத்தை மீண்டும் முன்வைப்பதே தனது முதன்மையான இலக்கு என அபெர் கவாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தை அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸோஹ்ரான் மம்தானியுடன் இணைந்து 2023ஆம் ஆண்டு உருவாக்குவதில் அவர் பங்காற்றியிருந்தார். எனினும், அந்த முயற்சி அப்போது வெற்றியளிக்கவில்லை. தற்போது அதனை மீண்டும் முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த இலக்கை அடைவதில் சட்டமன்றத் தலைமைத்துவத்தின் அரசியல் விருப்பமும் ஆதரவும் முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டமன்றத்தில் ஜனநாயக சோசலிசவாதிகள் சிறுபான்மையாக இருப்பதால், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது சவாலானதாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முற்போக்கு வேட்பாளர்களின் வெற்றிப் பின்னணி

இம்முறை அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அபெர் கவாஸ் மாத்திரமன்றி, பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட பல வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனர்.

மிச்சிகன் மாநில செனட் சபைக்குத் தெரிவான அப்துல் எல்-சயீத் உள்ளிட்டோரின் வெற்றிகளும் அமெரிக்க அரசியலில் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பாலஸ்தீனிய அகதிப் பின்னணியிலிருந்து வந்த 34 வயதான அபெர் கவாஸ், நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore