பல நூற்றாண்டுகளாக நிலவிய மர்மம் முடிவுக்கு வந்தது! 1,500 ஆண்டுகள் பழமையான ஹாயா சோஃபியாவின் கீழ் மறைந்திருந்த சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஹாயா சோஃபியா (Hagia Sophia) வரலாற்றுச் சின்னத்தின் கீழ், பல நூற்றாண்டுகளாகக் கதைகளாகவும் ஊகங்களாகவும் பேசப்பட்டு வந்த நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் அறைகளின் வலையமைப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில நூறு மீற்றர் நீளமுடைய சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நிலத்தடி கட்டமைப்புகள் அகழ்வாராய்ச்சி மற்றும் சுத்திகரிப்புப் பணிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேலும் பல பகுதிகள் கண்டறியப்படலாம் என துருக்கியின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹாயா சோஃபியா, ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான வரலாற்றுக் கட்டடமாகும். ஆரம்பத்தில் தேவாலயமாக நிர்மாணிக்கப்பட்ட இது, பின்னர் பள்ளிவாசலாகவும் அருங்காட்சியகமாகவும் பயன்படுத்தப்பட்டு, 2020ஆம் ஆண்டு முதல் மீண்டும் பள்ளிவாசலாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய கட்டடம் கி.பி. 537ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலத்தடி கட்டமைப்புகளில் சில, தற்போதைய கட்டடம் உருவாக்கப்படுவதற்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

2025ஆம் ஆண்டு ஆரம்பமான கண்டுபிடிப்புப் பணிகள்

ஹாயா சோஃபியாவின் வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாக்கும் மூன்று ஆண்டுகாலப் புனரமைப்புத் திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கட்டடத்தின் கீழ் அமைந்துள்ள வளைந்த கூரைகளைக் கொண்ட பழைய நிலத்தடி அறைகளைச் சுத்தம் செய்யும் பணிகள் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இதற்கு முன்னர் அறியப்படாத பல நிலத்தடி கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், வளைந்த கூரைகளைக் கொண்ட அறைகள், அடக்கக் கட்டமைப்பு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய வீதியுடன் தொடர்புடையதாக நம்பப்படும் பாதை ஆகியவை அடங்குகின்றன.

இதுவரை சுமார் 3,000 தொன் மண் மற்றும் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன், 420 மீற்றர் நீளமான சுரங்கப்பாதைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இவை மேலும் பல கிலோமீற்றர் தூரத்துக்கு நீண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தப் பணிகள் தரைமட்ட லேசர் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒவ்வொரு கட்டமாகவும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆறு அறைகள் – ஒன்பது சுரங்கப்பாதைகள்

இதுவரை ஆறு நிலத்தடி அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஒன்பது சுரங்கப்பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதையின் சுமார் 180 மீற்றர் பகுதி இதுவரை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கப்பாதை ரோமானிய கால வீதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என துருக்கியின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் தெரிவித்துள்ளார்.

ஹாயா சோஃபியாவின் நுழைவுப் பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதை, பாத்திஹ் மதரஸா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் ஆரம்பித்து, பார்வையாளர்கள் நுழையும் பகுதியை நோக்கிச் செல்கிறது என அவர் விளக்கியுள்ளார்.

மேலும், ‘விசீர் தோட்டம்’ என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பழைய ரோமானிய அடக்கக் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்புப் பணிகளின்போது, சேற்றால் மூடப்பட்டிருந்த தரைப்பகுதிக்கு சுமார் ஐந்து அடி ஆழத்தில் மற்றுமொரு பழமையான கட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தற்போதைய ஹாயா சோஃபியா கட்டடம் உருவாக்கப்படுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

பழங்கால நீர் முகாமைத்துவத்தின் சான்றுகள்

இந்த நிலத்தடி கட்டமைப்புகள் வரலாற்றில் நீர் விநியோகம் மற்றும் மழைநீர் வடிகாலமைப்பு போன்ற முக்கிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் தெரிவித்துள்ளார்.

இவை இஸ்தான்புல் நகரின் பழங்கால நீர் முகாமைத்துவக் கட்டமைப்புகள் குறித்து புதிய தகவல்களை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றாசிரியரும் சுற்றுலா வழிகாட்டியுமான ஹசன் பாரிஸ் பார்டல் கருத்துப்படி, இந்த நிலத்தடி நீர்வழிகள் பண்டைய கான்ஸ்டான்டினோபிள் நகரின் பிரமாண்டமான நீர்வழிப் பாலங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம்.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால், அக்கால நகரத்தின் பொறியியல் மற்றும் கட்டுமானத் திறன்களைப் புரிந்துகொள்வதற்கு இது முக்கியமான ஆதாரமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கத் திட்டம்

ஹாயா சோஃபியாவின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நிலத்தடி பகுதிகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்துவதுடன், பொருத்தமான சில பகுதிகளைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்து வைப்பதும் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

எனினும், அவை எப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்பது தொடர்பான கால அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது இஸ்தான்புல் நகரின் கலாசார சுற்றுலாத்துறையில் அண்மைக்காலங்களில் இடம்பெறும் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாக அமையக்கூடும் என சுற்றுலாத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னர் முதலாம் ஜஸ்டினியன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஹாயா சோஃபியா, அதற்கு முன்னர் அந்த இடத்தில் இருந்த இரண்டு தேவாலயங்களின் மீதும், அவற்றுக்கு முன்னர் அமைந்திருந்த பண்டைய வழிபாட்டுத் தலத்தின் மீதும் கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1,500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தப் பிரமாண்டக் கட்டடத்தின் கீழ் மறைந்திருந்த நிலத்தடி உலகம் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளமை, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore