விண்வெளியில் அணுவாயுதத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மற்றும் மேற்கத்திய பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ள நிலையில், அவ்வாறான அணுவாயுதம் விண்வெளியில் வெடிக்கச் செய்யப்பட்டால் உலகளாவிய தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவின் Daily Mail வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரஷ்யா உருவாக்கி வருவதாகக் கூறப்படும் இந்த விண்வெளி அணுவாயுதத் திட்டம் ‘Sputnik-S’ என அழைக்கப்படுவதாகவும், அது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விண்ணில் செலுத்தப்படக்கூடும் என ஜேர்மனியின் உளவுத்துறை அமைப்பான BND தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் அணுகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டால், அதனால் உருவாகும் மின்காந்த அலை (Electromagnetic Pulse – EMP) செயற்கைக்கோள்களின் மின்னணு உபகரணங்களைச் செயலிழக்கச் செய்யக்கூடும். இதன் தாக்கம் பூமியிலுள்ள மின்சாரக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் அவசரகால சேவைகளையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், வெடிப்பினால் உருவாகும் கதிர்வீச்சு விண்வெளியில் நீண்டகாலம் நீடித்து, அப்பகுதியில் பயணிக்கும் செயற்கைக்கோள்களையும் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின்-மெடிசன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின்படி, பூமியிலிருந்து சுமார் 300 மைல் உயரத்தில் அணுகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டால், அப்போது சுற்றுப்பாதையில் உள்ள சுமார் 16,000 செயற்கைக்கோள்களில் 3 சதவீதம் உடனடியாக அழிக்கப்படலாம். ஒரு வாரத்திற்குள் 98 சதவீத செயற்கைக்கோள்கள் செயலிழக்கும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் GPS வழிகாட்டல், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் இணையச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம். இராணுவத் தகவல் தொடர்புகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் துல்லியமான வழிகாட்டல் தொழில்நுட்பங்களும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்படுகின்றது.
1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அணுப் பரிசோதனை
1962ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட ‘Starfish Prime’ என்ற உயர்மட்ட அணுப் பரிசோதனை இதற்கான வரலாற்று உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 250 மைல் உயரத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த அணுப் பரிசோதனையினால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டதுடன், ஹவாய் தீவுகளில் சுமார் 300 தெருவிளக்குகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் விண்வெளி ஆயுதத் திட்டம்
2022ஆம் ஆண்டு ரஷ்யா விண்ணில் செலுத்திய Kosmos 2553 செயற்கைக்கோள் தொடர்பிலும் அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது. அது விண்வெளி அணுவாயுதத் திட்டத்திற்கான பரிசோதனையாக இருக்கலாம் என அப்போது அமெரிக்கத் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்தச் செயற்கைக்கோள் தற்போது செயலிழந்த நிலையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ரஷ்யாவின் விண்வெளி அணுவாயுதத் திட்டம் தொடர்பில் எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது. 2024ஆம் ஆண்டிலும் ரஷ்யா அணுவாயுதம் பொருத்தப்பட்ட விண்வெளி எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனை ரஷ்யா மறுத்திருந்தது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், விண்வெளியில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யா எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
சர்வதேச ஒப்பந்தத்திற்கு முரணானதா?
1967ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட Outer Space Treaty எனப்படும் விண்வெளி ஒப்பந்தம், விண்வெளியில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்துவதைத் தடை செய்கின்றது. ரஷ்யாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாகும்.
ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் தலைவர் Josef Aschbacher, விண்வெளியில் அணுவாயுதம் வெடிக்கச் செய்யப்படுவது ‘மிகவும் மோசமான கனவுச் சூழ்நிலை’ என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, நேட்டோ பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் விண்வெளிப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவும் விண்வெளிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ராயல் விமானப்படை (RAF), செயற்கைக்கோள்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய விண்வெளிப் படைப் பிரிவொன்றையும் உருவாக்கியுள்ளது.
எனினும், ரஷ்யா உண்மையில் அணுவாயுதத்தை விண்வெளியில் நிலைநிறுத்தத் தயாராகி வருகிறதா அல்லது தொடர்ந்து பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





