பூமியை நோக்கி வரும் சிறுகோள்களைத் தடுக்க முடியுமா? நாசாவின் முதல் சோதனை வெற்றி – புதிய தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்!

பூமியை நோக்கி மோதும் பாதையில் வரும் ஆபத்தான சிறுகோள்களின் பயணப் பாதையை மாற்றி, பூமியைப் பாதுகாக்க முடியுமா என்பதை ஆராயும் விஞ்ஞானிகளின் முதல் முயற்சி வெற்றிகரமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), டைமோர்ஃபோஸ் (Dimorphos) என்ற சிறுகோள் மீது தனது DART விண்கலத்தை திட்டமிட்டு மோதச் செய்து இந்தப் பரிசோதனையை நடத்தியது.

மணிக்கு சுமார் 22,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த விண்கலம், சுமார் 150 மீட்டர் விட்டமுடைய சிறுகோளில் மோதியது. இதன் விளைவாக அந்தச் சிறுகோளின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட்டது.

மோதலுக்கு முன்னர், டைடிமோஸ் (Didymos) என்ற பெரிய சிறுகோளை ஒருமுறை சுற்றிவர 11 மணிநேரம் 55 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட டைமோர்ஃபோஸ், மோதலுக்குப் பின்னர் சுமார் 33 நிமிடங்கள் குறைவான நேரத்தில் சுற்றிவரத் தொடங்கியது.

இந்த மோதலால் சிறுகோளின் மேற்பரப்பில் மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளதுடன், சுமார் 10,000 கிலோமீட்டர் நீளத்திற்கு சிதைவுப் பொருட்கள் பரவியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஹெரா (Hera) விண்கலம் சம்பவ இடத்தை ஆராய்ந்து, மோதலின் விளைவுகள் தொடர்பான புதிய படங்களையும் தரவுகளையும் பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் சிறுகோளின் நிறை, மேற்பரப்பு அமைப்பு, மோதலின் தாக்கம் மற்றும் அதன் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் மேலதிக தகவல்களைப் பெறவுள்ளனர்.

பூமிக்கு என்ன ஆபத்து?

ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான விட்டமுடைய பெரிய சிறுகோள்கள் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதேவேளை, நடுத்தர அளவிலான சிறுகோள்கள் ஒரு நகரத்தையே அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

எனினும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள பெரிய சிறுகோள்களில் எதுவும் எதிர்காலத்தில் பூமியுடன் மோதும் பாதையில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பூமிக்கு அருகிலுள்ள ஆபத்தான விண்வெளிப் பொருட்களைக் கண்காணிப்பதற்காக 2027ஆம் ஆண்டு NEO Surveyor என்ற புதிய விண்வெளித் தொலைநோக்கித் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி அபோஃபிஸ் (Apophis) என்ற சிறுகோள் பூமிக்கு சுமார் 32,000 கிலோமீட்டர் உயரத்தில் மிக அருகில் கடந்து செல்லவுள்ளது. இருப்பினும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு அது பூமியுடன் மோதாது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் ஆபத்தான சிறுகோள்கள் பூமியை நோக்கி வருவதை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் பாதுகாப்பில் மிக முக்கியமான முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore