வாடகை வாகன சாரதிகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, பொரளை கோதாமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ‘ICE’ எனப்படும் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், கடந்த மே 29 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் சாரதி ஒருவரிடமிருந்து 80,000 ரூபாவும், அதே நாளில் மற்றொரு சாரதியிடமிருந்து 40,000 ரூபா, தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு புளூடூத் ஹெட்செட்டுகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், மே 7 ஆம் திகதி கோதாமி வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து 3,000 ரூபா மற்றும் கைப்பேசியும் பறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு, இதற்கு முன்னரும் பணம் மற்றும் கைப்பேசி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றொரு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபரும் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 🚔⚠️





