ஈரான் சர்வதேச வான்வெளியில் இயங்கிய அமெரிக்க MQ-1 Predator ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரானின் ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் கெருக் நகரம் மற்றும் கேஷ்ம் தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு படைகள் தங்கள் வான்வெளியை நோக்கி வந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளன.
ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இந்த நீரிணை முக்கிய பங்கு வகிப்பதால், சர்வதேச சந்தைகளில் பதற்றம் நிலவுகிறது.
அதேவேளை, ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இருதரப்பினரின் தாக்குதல்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





