மீகொட வெசாக் தான்சலில் காத்திருந்த பொதுமக்கள் மீது வாகனத்தை மோதி 7 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இரட்டை கெப் வாகன சாரதி ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
42 வயதுடைய சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அவிசாவளை இலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரட்டை கெப் வாகனம், ஒரு லொறியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தான்சலில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன், அவர் மதுபோதையில் இருந்ததோடு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும், காலாவதியான ஆவணங்களுடன் வாகனத்தை இயக்கியிருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





