பராமரிப்பு பணியாளர் (Care Worker) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், சட்டபூர்வமாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கை குடும்பங்களுக்கு அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு United Kingdom உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தகவல்களின்படி, அண்மைய வாரங்களில் குறைந்தது 5 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு முதல் ஸ்கொட்லாந்தின் Perth பகுதியில் பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வரும் இலங்கையைச் சேர்ந்த வருணி ஆராச்சிகே, “எனது விசா 2031 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது” என கவலை வெளியிட்டுள்ளார்.
மற்றொரு இலங்கையரான ரசிக்க சமரசிங்க, “நாங்கள் சட்டபூர்வமாகவே வாழ்கிறோம். அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளோம். என் குடும்பம் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.
2024 மார்ச் மாதம் முதல் Care Worker விசா பெற்றவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்துவர தடை விதிக்கப்பட்டது. மேலும், 2025 ஜூலை முதல் வெளிநாட்டு ஆட்சேர்ப்பும் நிறுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரித்தானிய உள்துறை அமைச்சகம், “பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேறுவது ஒரு உரிமையல்ல; அது சம்பாதிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புரிமை” என தெரிவித்துள்ளது. 🇬🇧📌





