மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான நேரம் எந்தத் தெளிவான நோக்கமுமின்றி செலவிடப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Virgin Media O2 நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, பிரித்தானிய வயது வந்தோர் தினமும் சராசரியாக 4 மணி நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் 36% நேரம் சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளில் இலக்கில்லாமல் ஸ்க்ரோல் செய்வதிலேயே செலவாகிறது.
குறிப்பிட்ட காரணமின்றி அதிக நேரம் தொலைபேசியில் செலவிடுவோர், பின்னர் தங்களை மோசமாக உணர்வதாகவும், தீங்கு விளைவிக்கும் அல்லது விரும்பத்தகாத உள்ளடக்கங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எலினோர் டிரேஜ், இது தனிநபர்களின் தவறான பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல என்றும், நவீன தொழில்நுட்பங்களின் ஈர்க்கும் வடிவமைப்புகளும் அதிகப்படியான பயன்பாட்டை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6,000 பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், திரை நேரம் தொடர்பான சுய அறிக்கைகள் எப்போதும் துல்லியமாக இருக்காது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, ஆரோக்கியமற்ற டிஜிட்டல் பழக்கங்களை அடையாளம் காண்பது அவற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் படி எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க தேவையற்ற அறிவிப்புகளை (Notifications) முடக்குவது மற்றும் நேரடி சமூக, உடல் சார்ந்த செயல்பாடுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்ற வழிமுறைகளையும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“Age of Autopilot” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை வெளிப்படுத்துவதோடு, பயனர்களின் நடத்தையை பாதிக்கும் வகையில் டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.





