வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் சுயஇன்பத்தில் ஈடுபடுவது மனஅழுத்தம், தனிமை அல்லது மோசமான பராமரிப்பின் அறிகுறி என நீண்டகாலமாக கருதப்பட்டு வந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்று அந்த கருத்தை மறுத்துள்ளது.
பரிணாம உயிரியல் நிபுணர் க்ளோய் ஹெய்ஸ் தலைமையிலான ஆய்வுக் குழு மேற்கொண்ட ஆய்வின்படி, சுயஇன்ப நடத்தை பறவைகளிடையே பரவலாகக் காணப்படுவதோடு, அது அவற்றின் இயல்பான உயிரியல் நடத்தையின் ஒரு பகுதியாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாலூட்டிகளைப் போல பறவைகளுக்கு வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் இல்லை. அவை க்ளோஆகா (Cloaca) எனப்படும் பொதுவான திறப்பின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆய்வின்படி, பறவைகள் கிளைகள், குச்சிகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றில் தங்கள் க்ளோஆகாவை உரசுவதன் மூலம் சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றன.
இந்த ஆய்விற்காக 22 முக்கிய பறவை இனக் குழுக்களைச் சேர்ந்த 120 பறவை இனங்கள் தொடர்பான பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:
🔹 சுயஇன்ப நடத்தை பல்வேறு பறவை இனங்களில் காணப்படுகிறது.
🔹 பதிவான சம்பவங்களில் 55% ஆண் பறவைகளும், 36% பெண் பறவைகளும் ஈடுபட்டிருந்தன.
🔹 காட்டு சூழலிலும், மனிதர்களால் வளர்க்கப்படும் சூழலிலும் இந்த நடத்தை காணப்பட்டுள்ளது.
🔹 பல துணைகளுடன் இனப்பெருக்கம் செய்யும் பறவை இனங்களில் இந்த நடத்தை அதிகமாக பதிவாகியுள்ளது.
ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த நடத்தை வெறும் பாலியல் தூண்டுதலுக்கான வெளிப்பாடு மட்டுமல்ல; இனப்பெருக்க வெற்றியை அதிகரிக்கும் பரிணாம நன்மைகளையும் கொண்டிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதுவரை பலர் சுயஇன்பத்தில் ஈடுபடும் செல்லப்பறவைகளை “பிரச்சினையுள்ள பறவைகள்” எனக் கருதி கட்டுப்படுத்த முயன்ற நிலையில், இந்த ஆய்வு அந்த நடத்தையை இயல்பான மற்றும் ஆரோக்கியமான உயிரியல் செயல்பாடாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
பறவைகளின் பாலியல் நடத்தை குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பரிணாம ஆய்வுகளில் ஒன்றாக இந்த ஆய்வு கருதப்படுகிறது.





