Claude செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கியுள்ள Anthropic நிறுவனம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியை தேவையான சூழ்நிலைகளில் தற்காலிகமாக மெதுவாக்க அல்லது இடைநிறுத்தும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிவேகமாக முன்னேறிவரும் AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எதிர்கால AI அமைப்புகள் தாமாகவே மேம்பட்ட பதிப்புகளை உருவாக்கும் திறனைப் பெறக்கூடும் என்றும், இது “Recursive Self-Improvement” எனப்படும் சுய மேம்பாட்டு செயல்முறைக்கு வழிவகுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் AI பெரும் நன்மைகளை வழங்கக்கூடியதாக இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான சவால்களும் அதிகரித்து வருவதாக Anthropic சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மாறாக, OpenAI நிறுவனம், AI வளர்ச்சிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை தனியார் நிறுவனங்கள் அல்லாது ஜனநாயக அரசுகளே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், AI கருவிகளை பயன்படுத்தி தானாக பரவி தாக்குதல் நடத்தக்கூடிய சைபர் “worm” ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருப்பது தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் AI பாதுகாப்பு குறித்த உலகளாவிய விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சியை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல. 2023ஆம் ஆண்டு Elon Musk உள்ளிட்ட பலர், மேம்பட்ட AI பயிற்சிகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்த வேண்டும் எனக் கோரி திறந்த கடிதமொன்றில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





