ஹன்வெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
எம்புல்கம நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியோரமாக அதே திசையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த இரு பெண்களும் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ரணால மற்றும் கிராண்டுருக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியையும் விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில், விபத்து இடம்பெற்ற வேளையில் சந்தேகநபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹன்வெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





