ஹொரணை வங்கி கொள்ளையில் நடந்த திடீர் திருப்பம்

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (07) குறித்த வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கமைய, தற்போது அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணை நடவடிக்கைகளின் பின்னர் அவர் மில்லனிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உதவி முகாமையாளரை ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக 30.5 மில்லியன் ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்ட போது, கொள்ளையர் ஒருவர் அதனைப் பறித்துச் சென்றதாக கடந்த ஜூன் 3ஆம் திகதி ஹொரணை தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பணத்திற்கு பொறுப்பாக இருந்த உதவி முகாமையாளரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போதிலும், முறையான எந்தவொரு தடயமும் வெளிவராததால், பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணைகளை பேலியகொடை வடக்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றினார்.

அவ்வதிகாரிகள் வங்கியின் சி.சி.டி.வி காட்சிகளைப் பரிசோதித்த போது, வங்கியின் உதவி முகாமையாளர் அன்றைய தினம் காலையில் வங்கியின் பாதுகாப்பறையிலிருந்து பணத்தை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

வங்கிக்கு வெளியே வரும் பகுதியில் எந்தவொரு சி.சி.டி.வி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், சுற்றியுள்ள ஏனைய சி.சி.டி.வி கேமராக்களைப் பரிசோதித்த விசாரணை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான நபர் எவரும் பணப் பைகளை எடுத்துச் செல்லும் காட்சி தென்படவில்லை.

அதேநேரம், வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்புறப்படுத்தப்படும் பழைய பொருட்கள் போடப்படும் கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்து 1,740,000 ரூபா பணம் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, சந்தேகநபரான உதவி முகாமையாளர், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தொடர்புபடுத்தி மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பணத்தைக் கொள்ளையடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபரான உதவி முகாமையாளரும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபரான உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், வீடுகளைப் பரிசோதிப்பதற்கான சோதனையிடுவதற்கான உத்தரவு ஒன்றையும் ஹொரணை பிரதான நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர் வேவல, கங்கோட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என்பதுடன், மற்றைய சந்தேகநபர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தராவார்.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore