சீன நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய பிரிவுகள் மக்களின் பாவனைக்கு கையளிப்பு.
( அன்ஷத் அகமட் )
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பராமரிப்புப் பிரிவு, முதிராக்குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் ஆகியன திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாஷங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பிரிவுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன், சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் அன்டன் சுவர்னன் , மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் உதார தயானந்த மற்றும்திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ்உள்ளிட்ட பல்வேறு துறைசார் வைத்திய நிபுணர்கள் பங்கேற்றனர்.மேலும்
வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மருத்துவ அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிட வசதிகள் மூலம் சிறுவர் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படுவதுடன், சம்மாந்துறை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கும் திறன் அதிகரிக்கும் என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.








