இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால் மீண்டும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஈரானின் ஆயுதப்படைகள் வெளியிட்ட அறிக்கையில், “லெபனான் மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் ஆட்சிக்கு எதிராக வலிமையான மற்றும் வேதனையான பதிலடி வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தெற்கு லெபனான் உட்பட எந்தப் பகுதியில் இருந்தும் ஆக்கிரமிப்பு மற்றும் விரோத நடவடிக்கைகள் தொடருமானால், இதற்கு முந்தையதை விட மிகக் கடுமையான மற்றும் நசுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “தெஹ்ரான் புதிய சமன்பாட்டை உருவாக்க முயற்சிப்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது” என தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, இஸ்ரேலின் மக்கள் வசிக்கும் பகுதிகளை ஈரான் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், “எமது குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் லெபனானில் தொடர்ந்து முன்னெடுப்போம்” என இஸ்ரேல் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.





