வடக்கு கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகி, கரையுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிக்கித் தவித்த மீன்பிடி படகு ஒன்றையும் அதிலிருந்த மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
அபாயத்தில் சிக்கியிருந்த மீன்பிடி படகு தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வழங்கிய அவசர தகவலின் அடிப்படையில், கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC Colombo) மூலம் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அனலைத்தீவு கடற்பரப்பில் சிக்கியிருந்த மீன்பிடி படகையும் அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கடற்படையினர் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீனவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இயந்திரக் கோளாறுக்கு உள்ளான குறித்த மீன்பிடி படகை இழுத்து கரைக்கு கொண்டு வருவதற்கான உதவியையும் கடற்படை வழங்கியுள்ளது.
இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் (SRR) அவசர நிலைகளில் சிக்கிக்கொள்ளும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு விரைவாக உதவுவதற்காக, MRCC கொழும்புடன் இணைந்து கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





