டிட்வா (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளின் நிலைமை தொடர்பான முழுமையான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் துறை பாடசாலைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மீது சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சேதமடைந்த பெருந்தோட்டப் பாடசாலைகளின் மறுசீரமைப்பு, காணி உரிமைப் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த பாடசாலைகளை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், சேத விபரங்களைத் துல்லியமாகச் சேகரிப்பதில் அமைச்சுக்கும் மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்புக் குறைபாடு இருப்பது தெரியவந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், “பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவது மட்டும் போதுமான தீர்வல்ல. அவர்கள் உண்மையில் பாடசாலைக்குச் செல்கிறார்களா, கல்வியைத் தொடர்கிறார்களா, என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மாற்றுப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட சில மாணவர்கள் வகுப்புகளுக்கு வராதுள்ளதாகவும், அவர்களை உடனடியாக அடையாளம் கண்டு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்காலிக பாடசாலைகளை அவசரமாக அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
அத்துடன், தமிழ்மொழி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழ் பேசும் ஆசிரியர்களை தனியாக ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களில் 50% இவ்வாண்டு நிரப்பப்படும் என்றும், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பாடசாலைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தடையற்ற 13 ஆண்டுக் கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தமிழ்மொழி தொழிற்கல்வி வாய்ப்புகளையும் விரிவுபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.





