ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவத்தின் Apache ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க நேரப்படி மாலை 5.00 மணியளவில் (EST) தாக்குதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது “ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அளவான பதிலடி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த இரு பணியாளர்களும் அமெரிக்க கடற்படையின் கடல் ட்ரோன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் விழுந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அது திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் இல்லை என்றும் சில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கத் தாக்குதல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் குஹிஸ்தாக், சிறிக் மற்றும் மினாப் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





