நாளை ஆரம்பமாகும் கால்பந்து திருவிழா!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். அதற்கு அடுத்தப்படியாக திகழ்கிறது உலக கிண்ண கால்பந்து போட்டி. உலக கிண்ண கால்பந்து 1930 ஆம் ஆண்டு உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் போட்டியை நடத்திய உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது.

2 ஆம் உலக போர் காரண மாக 1942 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் போட்டி நடை பெறவில்லை. கடைசியாக உலக கிண்ண போட்டி 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்தது. இதில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட் அவுட்டில் (-2) பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

23 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த கால்பந்து திருவிழா நாளை (11) கோலாகலமாக தொடங்குகிறது. ஜூலை 19 ஆம் திகதி வரை 37 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் முதல் முறையாக 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த 7 போட்டி தொடரில் 32 அணிகளே (1998 – 2022) கலந்து கொண்டன. தற்போது கூடுதலாக 16 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

போட்டியை நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா உள்பட மீதியுள்ள 45 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 48 நாடுகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாடுகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 28 திகதியுடன் ‘லீக்’ சுற்று முடிகிறது.

இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் (24) 2 ஆவது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெறும்.

மேலும் 3 ஆவது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் முன்னேறும். ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை 2 ஆவது சுற்று நடைபெறும். இதில் 32 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 16 அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நுழையும். அதில் இருந்து 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையும் கால் இறுதி போட்டிகள் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டங்கள், இறுதிப் போட்டி நடக்கிறது. இறுதி ஆட்டம் ஜூலை 19 ஆம் திகதி (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த கால்பந்து உலக கிண்ணத்தில் விளையாடும் அணிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல் பிரேசில், மொராக்கோ, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, குரோஷியா, மெக்சிகோ, கொலம்பியா ஆகியவை சிறந்தவையாகும்.

பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கிண்ணத்தை வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 தடவையும், அர்ஜென்டினா 3 முறையும், பிரான்ஸ், உருகுவே தலா 2 தடவையும், இங்கிலாந்து. ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 3 ஆவது தடவையாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

உலக கிண்ணத்தை கைப்பற்ற ஐரோப்பா – தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் கிண்ணத்தை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி நெதர்லாந்து, போர்த்துக்கல், பெல்ஜியம் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பில் உள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசில் அணி 6 ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதே போல் அர்ஜென்டினா அணி கிண்ணத்தை தக்க வைத்து 4 ஆவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

மெஸ்சி – எம்பாப்பே, லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எம் பாப்பே, டெம்ளே, ஒலிஸ் (பிரான்ஸ்), லாமின் யமல் (ஸ்பெயின்) கிறிஸ்டியானோ ரொனால்டோ, புருனோ பெர்னாண்டஸ் (போர்ச்சுக்கல்) ஹாரிகேன், ஷக்கா, பெல்லிங்காம் (இங்கிலாந்து), வின்சியஸ் ஜூனியர், நெய்மர் (பிரேசில்), எர்லிங் ஹாலண்ட் (நார்வே) போன்ற நட்சத்திர வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

தொடக்க நாளில் 2 ஆட்டம் நடக்கிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது. இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இதே பிரிவில் உள்ள தென் கொரியா – செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கிண்ணத்தை வெல்லுமா? அல்லது புதிய அணி கிண்ணத்தை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore