ஈஸ்டர் தாக்குதலில் சுரேஷ் சல்லே சதியில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சதித் திட்டத்தில் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தீவிரமாக ஈடுபட்டிருந்ததை நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தாக்குதல் நடைபெறவிருந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சல்லேவுக்கு முன்கூட்டியே தகவல் இருந்ததாக கூறினார்.

தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், நெகொம்போவில் உள்ள தேவாலயத்தில் திருப்பலியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய தகவல்களை சேகரிக்க நான்கு முஸ்லிம் நபர்களை சல்லே பயன்படுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த நால்வரில் முக்கிய நபராக இருந்த ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) சாட்சிகளால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், தாக்குதல் தொடர்பாக இராணுவ புலனாய்வுக்கு தகவல் வழங்கிய தகவலாளரை சுரேஷ் சல்லே கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்ததற்கான ஆதாரங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவராமல் தடுக்க சல்லே நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அண்மையில் சுரேஷ் சல்லே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், பிரதான சந்தேகநபருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தனது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அவரது உடல்நிலை மற்றும் நலனைப் பரிசீலிக்க நீதவான் நேரில் சென்றபோதும் மனிதாபிமானமற்ற நடத்தை குறித்து எந்தப் புகாரும் முன்வைக்கப்படவில்லை என்றும், வேறு எந்த அதிகாரியிடமும் அவர் அதுபோன்ற புகார்களை அளிக்கவில்லை என்றும் கூறினார்.

சுரேஷ் சல்லே தனது மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் வழங்க மறுத்து, விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு போராட்டம் அல்லது சத்தியாகிரகத்தாலும் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore