2026 FIFA உலகக் கிண்ண ரசிகர் மண்டலத்தின் (Fan Zone) உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வு நேற்று (11) கொழும்பு கோட்டை யோர்க் வீதியில் அமைந்துள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் முன்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பதற்கு FIFA தனது ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு FIFA துணைத் தலைவரின் இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், இலங்கை முதலீட்டு சபைக்கு சொந்தமான நீர்கொழும்பு கடொல்கலே மைதானம் இந்தத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மைதானம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதுடன், குறிப்பாக நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுலாத்துறைக்கும் பெரிய ஊக்கமாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், கிரிக்கெட்டைப் போலவே கால்பந்தும் இலங்கையின் விளையாட்டு சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனுடன், 1837ஆம் ஆண்டு முதல் வரலாற்றுப் பெருமையை தக்கவைத்துள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலை நவீன வசதிகளுடன் மேம்படுத்த அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளை நேரடியாகக் காணும் வாய்ப்புடன், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்த Fan Zone-ஐ பயன்படுத்தி அதன் வரலாற்றுச் சிறப்பை அனுபவிக்குமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.





