பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் நடைபெறும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள், போலி WhatsApp கணக்குகள் மற்றும் போலி இணைய அடையாளங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடியாகப் பெறும் நோக்கில், தங்களை பொலிஸ் அதிகாரிகள் அல்லது அரச அதிகாரிகள் எனக் கூறி ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், கணினி மற்றும் கைப்பேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள், அடையாளத் திருட்டு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்கள், மத்திய வங்கி, குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அல்லது பொலிஸின் விசேட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தேசிய அடையாள அட்டை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது, வங்கி அட்டை சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளது அல்லது பணச்சலவை விசாரணையில் உங்கள் கணக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என அச்சுறுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பின் WhatsApp அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறி, போலி ஆவணங்கள், அரச அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி அதிகாரப்பூர்வ சின்னங்களை பயன்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் OTP குறியீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்களைப் பெறுவதோடு, தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பவோ அல்லது USDT போன்ற கிரிப்டோகரன்சிகளை வாங்கி மாற்றுமாறும் வற்புறுத்தப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தொலைபேசி, WhatsApp அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக எந்த அரச அல்லது தனியார் நிறுவனமும் தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி தகவல்கள், ATM அட்டை எண்கள், CVV எண்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP குறியீடுகளை கோராது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல், இலங்கை பொலிஸார், CID அல்லது மத்திய வங்கி தனிப்பட்ட WhatsApp கணக்குகள் மூலம் விசாரணை நடத்தவோ அல்லது விசாரணை பெயரில் பணம் அனுப்புமாறு கோரவோ மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை திறப்பது, செயலிகளை பதிவிறக்கம் செய்வது, தெரியாத இணையதளங்களை அணுகுவது அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது போன்றவற்றை தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகளின் மூலம் உறுதிப்படுத்தி, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை கணினிக் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore