மஜீட். ARM
சம்மாந்துறை, மஜீட்புர கிராமத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் சுகாதார நிலையத்திற்கான புதிய நீர் தாங்கி மற்றும் நீர் குழாய்கள் பொருத்தும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இக்குடிநீர் திட்டமானது, நெதர்லாந்து சர்வதேச மனிதாபிமான அமைப்பின் நிதியுதவியுடன், ‘அல்-கித்மதுல் உம்மா பவுண்டேஷன்’ நிறுவனத்தினால் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சம்மாந்துறை மண்ணுக்குக் கொண்டு வந்து, பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி வரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொறியியலாளரும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளருமான M. இம்தியாஸ் மர்சூக் அவர்களின் நெறிப்படுத்தலில் இச்சேவை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், சம்மாந்துறை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தி திட்டங்களிலும் மஜீட்புர கிராம மக்களும் உள்வாங்கப்பட்டு பயனடைய வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் YBM. நவாஸ் அவர்களும் இத்திட்டம் கிராமத்திற்கு கிடைப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அண்மையில் சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று சுகாதார வைத்திய அதிகாரி Dr. Mrs. Nisreen Ziyadh, பிரஜா சக்தி தவிசாளர்களான A.M. ஹினாயத்துல்லாஹ், A.M. முசாபிர், மற்றும் M.M. தௌஃபீக் (Thowfeek Sir), பள்ளிவாசல் மௌலவிமார்கள், அல்-கித்மதுல் உம்மா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் G.M. பாதிஹ் (G.M. Fathih) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், கிராமத்து தாய்மார்களும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.
தமது அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, இப்பயனுள்ள மனிதாபிமான திட்டத்தை நன்கொடையாக வழங்கிய நெதர்லாந்து சர்வதேச மனிதாபிமான அமைப்பிற்கும், அதனைச் சிறப்பாகச் செயல்படுத்திய அல்-கித்மதுல் உம்மா பவுண்டேஷன் நிறுவனத்திற்கும், இத்திட்டத்தை கிராமத்திற்குக் கொண்டு சேர்க்க உழைத்த பொறியியலாளர் இம்தியாஸ் மர்சூக், பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிகாரிகள், உலமாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மஜீட்புர கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








