டம்புள்ளையில் திங்கட்கிழமை நடைபெற்ற முத்தரப்பு தொடரின் போட்டியில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இலங்கை A அணியின் வீரர் விஷேன் ஹலம்பகே மற்றும் இந்தியா A அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி நடுவரின் பரிந்துரையின்படி, இரு வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்வயர் அறிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடர் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) நடத்தும் போட்டி அல்லாததால், இறுதி முடிவை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் சபைகள் மற்றும் தொடர் அதிகாரிகளே எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை A அணி சூப்பர் ஓவரில் இந்தியா A அணியை பரபரப்பாக வீழ்த்திய போட்டியின் முடிவில், ஹலம்பகே மற்றும் 15 வயதான சூர்யவன்ஷி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தன.
எனினும், இதுவரை தொடர் ஏற்பாட்டாளர்கள், இலங்கை கிரிக்கெட் (SLC), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அல்லது போட்டி அதிகாரிகள் சார்பில் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.





