சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைக் குறைப்பின் பலன் எதிர்காலத்தில்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை அரசாங்கம் எரிபொருளுக்காக 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, மீண்டும் அந்த மானியத்தை வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையினால், அதற்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் சற்று அதிகரிக்க நேரிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த உயர்ந்த எரிபொருள் விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவை என்பதால், எதிர்காலத்தில் முன்பதிவு செய்யப்படும் எரிபொருளுக்காக அதன் செலவை ஈடுசெய்து, அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“போர்ச் சூழலுக்கு முன்னிருந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. உதாரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை நாங்கள் இறுதியாக 64-65 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையிலேயே பெற்றுக்கொண்டோம். அது 125 டொலர்கள் வரை அதிகரித்தது. அக்காலகட்டத்தில் விலை இருமடங்காகிய போதும், நாமும் விலையை இருமடங்காக அதிகரித்து இலாபம் உழைக்கும் இடத்திற்கு செல்லவில்லை. அன்று நாம் நிலவிய விலைகளிலேயே எரிபொருளை வழங்கவே முயற்சித்தோம்.

விலை அதிகரிப்பை கூட நாம் மிகுந்த புரிதலுடன் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொண்டோம். ஆனால், தற்போது அந்த உயர்ந்த விலை 125 டொலர்களிலிருந்து குறைந்து, 70 டொலர்கள் என்ற மட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த விலைகளுக்கமைய செலவுகளை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் கிடைக்கும்போதுதான், அதன் நன்மையை எம்மால் மக்களுக்கு வழங்க முடியும்.

இப்போது பெறப்படும் எரிபொருள், குறிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ளவை, கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவையாகும். தற்போது எம்மால் இந்தச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாததால், 100 பில்லியன் ரூபா தொகுப்பிற்குள் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இதற்கான மானியத்தை வழங்கினோம்.

இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியம் முடிவடைகிறது. தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து, விலை மாற்றங்களைச் செய்துவிட்டு, மீண்டும் மானியம் வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிப்போம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க நாங்கள் தயாரில்லை. அந்த நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.” என்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore