இஸ்ரேல் – லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வொஷிங்டனில் பல நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இருப்பினும், இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே கருதுகின்றனர்.

லெபனான் தூதுவர் நடா மொவத் (Nada Moawad) மற்றும் இஸ்ரேலிய தூதுவர் யெஹியேல் லைட்டர் (Yechiel Leiter) ஆகியோர் வொஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்த முத்தரப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர், ஆனால் இது குறித்த சில விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறினால், இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானைத் தொடர்ந்து ஆக்கிரமிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

“இன்று நாம் ஒரு கடினமான பயணத்தின் முதல் படியை எடுத்து வைத்துள்ளோம், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இது ஒரு முக்கியமான, அவசியமான மற்றும் தேவையான படியாகும்,” என்று ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், “லெபனானுக்கான இராணுவ ஒருங்கிணைப்புக் குழு” மூலம் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா வசதிகளை ஏற்படுத்தும் என்றும், ஐ.நா.வுடன் இணைந்து உடனடி மனிதாபிமான உதவியாக 100 மில்லியன் டொலர் உட்பட குறிப்பிடத்தக்க வளங்களை வொஷிங்டன் வழங்கும் என்றும் கூறினார்.

தற்போதுள்ள அமெரிக்க அதிகார வரம்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 30 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியுடன், “லெபனான் பிரதேசம் முழுவதும் இறையாண்மையை மிகவும் திறம்பட நிலைநாட்டுவதற்கு” லெபனான் ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான தனது நோக்கத்தை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியதாக ரூபியோ மேலும் கூறினார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 2 அன்று ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் வெடித்தது.

ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இத்தாக்குதல்களால் லெபனானில் 4,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லெபனானின் தூதுவர் மொவத்தும் இதனை லெபனான் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான பாதையில் ஒரு “முதல் படி” என்று கூறினார்.

“ஈரான் வெளியேறிவிட்டது, ஹிஸ்புல்லா வெளியேறிவிட்டது, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான அமைதிக்கான பாதை இப்போது திறந்துள்ளது,” என்று இஸ்ரேலிய தூதுவர் லைட்டர் கூறினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore