சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு!

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் (SSWF) உத்தியோகபூர்வ இணையத்தளம் அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சமூக நலப் பணிகளை நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்து, பொதுமக்களுடனான தொடர்பாடலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் ஊடாக, நிதியத்தின் செயற்பாடுகள், திட்டங்கள், அறிவிப்புகள், கணக்கறிக்கைகள் மற்றும் எதிர்கால சமூக நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது, சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் அறிமுகக் காணொளி வெளியிடப்பட்டதுடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான சேவைகளை எடுத்துரைக்கும் ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இவ்வாவணப்படம், அமைப்பின் வெளிப்படையான செயற்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை வெளிக்கொணர்வதாகப் பங்கேற்பாளர்களால் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இணையத்தளத்தின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் எதிர்கால விரிவாக்கங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இணையத்தளத்தின் பல்வேறு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ்விணையத்தளத்தை களனிப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத் துறையில் முதுதத்துவமாணி (MPhil) பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும், பிகாஸ் கெம்பஸின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளரும், சம்மாந்துறை சிலியட் உயர்கல்வி நிறுவனத்தின் வருகைதரு விரிவுரையாளருமான திருமதி ஏ.எஸ்.எப். றுமானா நவாஸ் அவர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் முழுமையாக இலவசமாக வடிவமைத்திருந்தார். மேலும், இணையத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், தரவுப் பயன்பாடு மற்றும் அதன் செயற்பாட்டு முறை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

சமூக நலப் பணிகளை டிஜிட்டல் தளத்துடன் இணைக்கும் முக்கிய முன்னேற்றமாக இந்த இணையத்தளம் அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் சம்மாந்துறை மக்களுக்கான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் புதிய அத்தியாயமாக இது அமையும் என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். நசீல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் தவிசாளர் பொறியியலாளர் ஏ.ஜே. முஹமட் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிர்வாகத் தலைவரும் மத விவகாரங்கள் பணிப்பாளருமான மௌலவி ஏ.பி.எம். றம்ஸீன் (காஷிபி) அவர்களின் வழிகாட்டலில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மேலும், பதில் தவிசாளரும் சுகாதார மற்றும் சமூக சேவைப் பணிப்பாளருமான வைத்தியர் ஐ.எல்.எம். றிஸ்வான், சட்டப் பணிப்பாளரும் சட்ட ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம். நவாஸ், ஏனைய பணிப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சமூகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore