ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிக்கும் குழு (CEDAW Committee) உறுப்பினர் தேர்தலில், இலங்கை அதிகபட்ச வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவாகியுள்ளது.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பேராசிரியர் ரங்கிதா டி சில்வா 185 செல்லுபடியாகும் வாக்குகளில் 144 வாக்குகளை பெற்று அனைத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
மேலும், CEDAW குழுவிற்கு மீண்டும் தெரிவான ஒரே இலங்கையராகவும் பேராசிரியர் ரங்கிதா டி சில்வா வரலாறு படைத்துள்ளார்.
இலங்கை பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும், பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையையே இந்த வெற்றி பிரதிபலிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற நாடுகள்: எகிப்து (141), உகாண்டா (140), மங்கோலியா (136), கனடா (135), எஸ்டோனியா (133), அசர்பைஜான் (133), கியூபா (128), ஸ்பெயின் (125), நைஜீரியா (123), மெக்சிகோ (119), அன்டிகுவா மற்றும் பார்புடா (118) ஆகியவையாகும்.





