அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் இ. ஜீன் கரோல் (E. Jean Carroll) தொடர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டு தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.
இதன் மூலம், டிரம்ப் 2022ஆம் ஆண்டு ஜூரி வழங்கிய தீர்ப்பின்படி 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை செலுத்த வேண்டிய நிலை உறுதியாகியுள்ளது.
கரோல் தனது வழக்கில், 1990களின் நடுப்பகுதியில் நியூயோர்க் நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் டிரம்ப் தம்மை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததுடன், பின்னர் குற்றச்சாட்டை மறுத்து தம்மை அவதூறு செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் கரோலுக்கு 83 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வட்டியுடன் சேர்த்து, டிரம்ப் தற்போது கரோலுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், 83 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டு தீர்ப்புக்கு எதிராகவும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய டிரம்பின் சட்டத்தரப்பினர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





