போதை மீண்ட இளைஞர்களுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதற்காகக் கைத்தொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

மறுவாழ்வு பெற்ற இந்த இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களைத் தனியார் துறையின் நிலையான தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதை இதன்மூலம் எதிர்பார்ப்பதுடன், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, மறுவாழ்வு பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்ததாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஆகியோரின் தலைமையில் இது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (30) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போது தனியார் துறையின் கைத்தொழில் துறையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் காணப்படுவதாகவும், எனினும் அந்தப் பணியிடங்களுக்குப் போதுமான தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற ஊழியர்கள் இல்லை என்றும் கூறினார்.

இதன் காரணமாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாகக் கட்டுமானம், டைல்ஸ் மற்றும் அதன் உபகரணங்கள், காலணிகள், தோல் பொருட்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல கைத்தொழில் துறைகளில் இவ்வாறு காலிப்பணியிடங்கள் நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் அமைச்சின் நேரடித் தலையீட்டின் கீழ், முறையான பயிற்சி மற்றும் வேலைத்திட்டத்தின் ஊடாக, மறுவாழ்வு அளிக்கப்பட்ட இந்தத் தொழிலாளர் படையினரைக் கைத்தொழிலாளர்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தினார்.

தற்போது பல்வேறு கைத்தொழில் துறைகளில் தொழிற்பயிற்சி பெற்ற, மறுவாழ்வு அளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் இளைஞர், யுவதிகள் உள்ளதாகவும், வவுனியா, சேனபுர மற்றும் கந்தகாடு ஆகிய மூன்று மறுவாழ்வு மையங்களின் ஊடாக வருடத்திற்கு சுமார் 800 போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு, தொழிற்பயிற்சியுடன் மீண்டும் சமூகத்தில் இணைக்கப்படுவதாகவும் இக்கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான எஸ்.டபிள்யூ.சி. ஜயமிணி, சுசந்த ஜயதிலக உள்ளிட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், மறுவாழ்வு பணியகத்தின் தலைவர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரதிப் போலிஸ் மா அதிபர் ஜே.ஏ.கே. மார்க் உள்ளிட்ட அதன் அதிகாரிகள் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore