டெங்குவால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம்

தற்போது சிறுவர்களிடையே டெங்கு நோய் பரவும் போக்குக் காணப்படுவதாகவும், இந்நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, டெங்கு நோய் காரணமாகக் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் மூளைப் பாதிப்புகள், தசை மற்றும் எலும்புகளில் கடுமையான வலி, அத்துடன் இதயப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக டெங்கு நோய் ஏற்பட்டு ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்போது, குழந்தை குணமடைவதற்கான அறிகுறிகளாக பசியின்மை நீங்குதல், புன்னகைத்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். எனினும், இவ்வாறான குணமடைவதற்கான அறிகுறிகள் தென்படாமல் குழந்தைக்குத் தொடர்ந்து காய்ச்சல் நீடிக்குமாயின், அது ‘HLH’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டுடன் தொடர்புடைய காய்ச்சலாக இருக்கலாம் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதுடன், பிள்ளைகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதற்காக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வீட்டின் ஜன்னல்களை மூடி வைப்பதற்கும், பிள்ளைகளுக்கு நீண்ட கைகளுடைய சட்டைகள் மற்றும் நீண்ட காற்சட்டைகளை அணிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர் இங்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெங்கு நோய் இன்னும் உயிருக்கு ஆபத்தானதாகவே காணப்படுவதால், இது குறித்துத் தீவிர கவனம் செலுத்துமாறு வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது சிறுவர்களிடையே டெங்கு நோய் பரவுவதைக் காண்கிறோம். நுளம்புகள் பெருகும் இடங்களைக் குறைப்பது போல, நுளம்புகள் கடிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலையில் 5.00 முதல் 7.00 மணிக்குள் முடிந்தவரை விரைவாக ஜன்னல்களை மூடி, நுளம்புகள் வீட்டிற்குள் வருவதைத் தடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, நீண்ட கைகளுடைய சட்டை மற்றும் காற்சட்டை அணிந்திருக்க முடிந்தால் நுளம்புக்கடியைக் குறைத்துக்கொள்ளலாம். டெங்கு நோய் ஏற்பட்டால், அறிகுறிகளாகக் காய்ச்சலுடன் கண்களுக்குக் கீழே வலி, தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளையே பொதுவாகக் காண்கிறோம். ஆனால், கடந்த நாட்களில் டெங்குவினால் சில சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்டோம்.

விசேடமாக டெங்குவினால் பிற்காலத்தில் அரிதாக மூளைக்கு பாதிப்பு ஏற்படலாம். இரண்டாவதாக, டெங்குவினால் தசை மற்றும் எலும்புகளில் வலி ஏற்படலாம். மூன்றாவதாக, டெங்குவினால் இதயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், அரிதாக டெங்கு நோய் ஏற்பட்ட பின்னர் தொடர்ந்து காய்ச்சல் நீடிக்கலாம், நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம். எனவே இது ஒரு விசேட நோய் நிலைமையாகும்.”

“டெங்கு பொதுவாக ஏற்பட்ட பின்னர் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்போது குணமாகிவிடும். டெங்கு குணமாகும்போது பிள்ளையின் பசி அதிகரிக்கும், பிள்ளை புன்னகைக்கும்.. உடலில் தடிப்புகள் (Rash) ஏற்பட்டு கை, கால்களில் அரிப்பு ஏற்படுவது போன்ற நிலைமைகள் வராமல் தொடர்ந்து காய்ச்சல் நீடித்து, குழந்தையின் நோய் நிலைமை தொடருமானால், சில வேளைகளில் இது ‘HLH’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலைமையாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் ‘CPK’ எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வோம். அவ்வாறு ஏற்பட்டால் ஓய்வு மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு இயற்கையான வெள்ளை நிற திரவ ஆகாரங்களை அருந்தக் கொடுங்கள். இதன் மூலம் இந்த நிலைமைகளைக் குறைத்துக்கொள்ளலாம்.

இது தவிர, இரத்தத் தட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை 150 வரை குறைந்தால், சில வேளைகளில் நாம் இந்தக் பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதித்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கும். டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) போன்ற நிலைமைகள் காணப்பட்டால், எப்படியும் வைத்தியசாலையில் பரிசோதித்து, 48 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பிள்ளையை பராமரிக்க வேண்டியிருக்கும். எனவே, டெங்கு இன்னும் உயிருக்கு ஆபத்தானதுதான்…” என்றார்.

இதேவேளை, கடந்த நாளில் மாத்திரம் சுமார் 1,200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 57,668 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய தினமும் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது அரச நிறுவனங்களில் நுளம்புகள் பெருகும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore