வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு மற்றும் அவை கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்புப் பிரிவில் நேற்று (16) நடைபெற்ற முதலாவது கூட்டத்தில், குழுவின் ஆரம்ப நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோரின் பணிப்புரையின் பேரில் கூட்டம் நடைபெற்றதுடன், அமைச்சின் மேலதிக செயலாளர் (கொள்கை, சட்ட சீர்திருத்தம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்) புவனேக ஹேரத் தலைமையேற்றார்.
இதன்போது, தற்போது நடைமுறையில் உள்ள வளர்ப்பு யானைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் அவற்றின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், அரசின் புதிய கொள்கைகளுக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆரம்ப செயற்திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த குழுவில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், தேசிய விலங்குக் காட்சிச்சாலைத் திணைக்களம், புத்தசாசன அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம், சுற்றுச்சூழல் அமைச்சு, ஓய்வு பெற்ற வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம், கலாசார ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் வளர்ப்பு யானைகளுக்கான முழுமையான சட்டக் கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் மூலம் இலங்கையின் கலாசார மரபுகளை பாதுகாப்பதோடு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனையும் சமகால மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப வலுப்படுத்துவதே நோக்கமாகும்.





