ஆரஞ்சு நிற உதடுகள் மற்றும் ஆழமான கர்ஜனை போன்ற குரலைக் கொண்ட புதிய குரங்கு இனம் ஒன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Colobus congoensis எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குரங்கு, உள்ளூர் மக்களால் “லிக்வெலி (Likweli)” என்று அழைக்கப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள ஐந்தாவது புதிய குரங்கு இனமாக இது கருதப்படுகிறது.
இந்த ஆய்வை புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் (FAU) மற்றும் நியூயார்க் நகர பல்கலைக்கழக (CUNY) ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் ஆய்வு PLOS ONE அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
புதிய குரங்கு இனம் பளபளப்பான கருப்பு நிற உடல், நீளமான வால், அடர்த்தியான ரோமம் மற்றும் ஆரஞ்சு கலந்த கிரீம் நிற முக அடையாளங்களைக் கொண்டுள்ளது. மேலும், இதன் மண்டையோடு, பற்கள் மற்றும் எலும்பு அமைப்புகள் ஏனைய ஆப்பிரிக்க கொலோபஸ் குரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 6.8 கிலோகிராம் எடையுடைய இந்தக் குரங்கு, இதனுடன் தொடர்புடைய பிற கொலோபஸ் குரங்குகளை விட சிறியதாகவும் காணப்படுகிறது.
இந்த புதிய இனத்தை அடையாளம் காணும் ஆய்வு 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. 2018 முதல் 2022 வரை ஆய்வாளர்கள் இந்தக் குரங்கை 114 முறை அவதானித்ததுடன், அதன் உடலமைப்பு, மரபணு தகவல்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவல்களையும் ஆய்வு செய்து இது புதிய இனம் என்பதை உறுதிப்படுத்தினர்.
எனினும், இந்தக் குரங்கு சுமார் 1,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே காணப்படுவதால், வாழ்விட அழிவு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக இது அழியும் ஆபத்தில் உள்ள (Endangered) இனமாக வகைப்படுத்தப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் பெரும்பாலான வாழ்விடம் லோமாமி தேசிய பூங்காவில் அமைந்துள்ளதால், அந்தப் பகுதியை பாதுகாப்பது இந்த அரிய குரங்கு இனத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





