இலங்கைக்குள் சர்வதேச அஞ்சல் பார்சல்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, 2026 ஜூன் மாதத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 4 போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளும், சர்வதேச அஞ்சல் பார்சல்கள் தொடர்பாக 9 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டிற்கு தினமும் அதிகளவிலான சர்வதேச அஞ்சல் பார்சல்கள் வருவதால் ஒவ்வொன்றையும் உடல் ரீதியாக பரிசோதிக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக ஸ்கேனர் தொழில்நுட்பத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் விரிவான சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
குறிப்பாக, “குஷ்” (Kush) என்ற போதைப்பொருளை அஞ்சல் பார்சல்கள் மூலம் இலங்கைக்குள் கடத்தும் முயற்சிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்டிருந்ததாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பார்சல்களில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும், அவற்றின் சமூக தாக்கம் மிகப்பெரியது என சுட்டிக்காட்டிய சுங்கப் பேச்சாளர், இவ்வகை போதைப்பொருட்கள் நேரடியாக இறுதி பயனாளர்களுக்கு அனுப்பப்படுவதுடன், பின்னர் வேறு பொருட்களுடன் கலந்து அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் எச்சரித்தார்.





