இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நவீன சமூகத்தில் மத வாழ்வு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், மக்கள் வழிபாட்டு தலங்களை விட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய பிரசங்கத்தில் அவர், ஐரோப்பா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளில் தேவாலயங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பல தேவாலயங்கள் மூடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“மக்கள் இனி தேவாலயங்களுக்கு வருவதில்லை. அதற்கு பதிலாக, கால்பந்து மைதானங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களில் பெருமளவில் கூடுகின்றனர்,” என அவர் கூறினார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய தேவாலயங்கள் இன்று பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுவது, கடவுள் மீதான நம்பிக்கை பலவீனமடைந்ததற்கான அறிகுறி என கர்தினால் குறிப்பிட்டார்.
1789 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், கடவுள் இல்லாத உலகை நோக்கி சமூகம் நகர்ந்து வருவதாகவும், மத வாழ்வு பலரின் வாழ்க்கையில் மிகக் குறைந்த பங்கையே வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமூகங்கள் முன்னேறுகின்றன என்று கூறப்பட்டாலும், உண்மையான மனிதப் பண்புகளிலிருந்து விலகி, உடல் தேவைகள் மற்றும் தற்காலிக இன்பங்களிலேயே மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றும், ஆன்மீக வாழ்க்கை புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போக்கு மனிதகுலத்தை தனிமைப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும், மனித கண்ணியத்தை பாதுகாக்கும் மதிப்புகளையும், இறைநம்பிக்கையையும் மீண்டும் கண்டடையுமாறு அவர் மக்களிடம் அழைப்பு விடுத்தார்.





