எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று (21) நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்துள்ளனர்.
பல எதிர்க்கட்சி எம்.பிக்களின் கையெழுத்துகளுடன் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பை அமைச்சர் சரிவர நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், 2024 நவம்பர் 25 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2412/08 இன் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட சிறைச்சாலை மறுசீரமைப்பு, நிர்வாகம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் உரிய முறையில் நிறைவேற்றவில்லை என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





