ஜூலை 22, 2026
இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி உடையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார் என சமூக ஊடகங்களில் பரவிய தகவல் பொய்யானது என உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Fact Crescendo Sri Lanka மேற்கொண்ட ஆய்வில், வைரலாக பகிரப்பட்ட பெண் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல என்றும், எந்தவொரு இலங்கை பாடசாலையுடனும் அவருக்கு தொடர்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.
ஆய்வின்படி, குறித்த பெண் குவாத்தமாலாவின் (Guatemala) Alta Verapaz, San Juan Chamelco பகுதியைச் சேர்ந்த Jeyme Stefanyh Hernández Reina என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் 2026 ஜூலை 11ஆம் திகதி குவாத்தமாலாவின் Cobán பகுதியில் நடைபெற்ற “Nuestra Belleza Monja Blanca 2026–2027” என்ற உள்ளூர் அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். இது மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டி அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார் அல்லது அவருக்கு எதிராக ஆசிரியர்கள் நடவடிக்கை கோரியுள்ளனர் என்ற கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என Fact Crescendo குறிப்பிட்டுள்ளது.
குவாத்தமாலா போட்டியாளரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாக பயன்படுத்தி, இலங்கை சமூக ஊடக பயனர்களை ஏமாற்றும் வகையில் இந்த போலியான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், இந்தக் கூற்றை “பொய்” (False) என Fact Crescendo Sri Lanka வகைப்படுத்தியுள்ளது.





