ஜனாதிபதி மாளிகை பொதுப் பயன்பாட்டிற்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் மாற்றப்படும் – பிரதமர் தெரிவிப்பு

ஜூலை 22, 2026

ஜனாதிபதி மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரச உத்தியோகபூர்வ வசிப்பிடங்களாக பயன்படுத்தாமல், பொதுமக்கள் பயன்பாடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகையையோ அல்லது முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களையோ பயன்படுத்துவதில்லை எனக் கூறினார்.

இந்த கட்டிடங்கள் பராமரிக்கப்பட்டு, சேதமடையாமல் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவை வர்த்தக அல்லது பொதுப் பயன்பாடுகளுக்காக மாற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவொன்று ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச கட்டிடங்களை வர்த்தக மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், சில முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஏற்கனவே நீதித்துறை பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதன் மூலம் நீதித்துறை செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி வளாகத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றி வருவதாகவும், சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore