யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – யாழில் பிரதமர்

கடந்த கால யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சவால்கள் மற்றும் பல்வேறு தடைகளை எதிர்கொண்ட போதிலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கல்வியில் முன்னேறி வருவது பாராட்டுக்குரியது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதுடன், மீண்டும் ஒருபோதும் அவ்வாறான யுத்த சூழல் உருவாகாத வகையில் அதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தின் ஏனையவர்களுக்கு சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், முன்பள்ளி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் வழங்கும் ஆதரவையும் பாராட்டிய பிரதமர், அவர்களின் வெற்றிக் கதைகள் எதிர்கால மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore