கம்பஹா, ராகம – கந்தான பிரதான வீதியின் வல்பொல ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற இந்த விபத்தில், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ரயில் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீதியோரமாகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





